தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அருகே திருக்கானூர்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடியில் காய் ஈக்களின் சேதத்தை குறைக்கும் செயல்விளக்க நிகழ்ச்சியை மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர் செய்து காட்டினார்.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர் பட்டி பகுதியில் முருங்கை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முருங்கை சாகுபடியில் ஏற்படும் காய் ஈக்களின் சேதத்தைக் குறைக்கும் விதமாக மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர் நவோதயன் புளித்த தக்காளிப் பொறி முறையை செயல்விளக்கம் செய்து காட்டினார்.
அப்போது, புளித்த தக்காளி கரைசலை சிறிய பாத்திரங்களில் ஊற்றி, முருங்கை மரங்களில் தொங்கவிட்டார். இந்த கரைசலின் புளிப்பு வாடை காய் ஈக்களை கவர்ந்து இழுத்து அழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவர் நவோதயன் கூறுகையில், “விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை குறைத்து, இயற்கை முறையிலான இந்த எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காய் ஈக்களை கட்டுப்படுத்த முடியும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது” என்று தெரிவித்தார்.