தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் விவசாய தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் மும்முரம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பகுதிகளில் ஆற்றுப் பாசனம் வாயிலாக சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வர ஆரம்பித்தது. இதையடுத்து ஆலக்குடி, 8.கரம்பை உட்பட பகுதிகளில் விவசாயிகள் ஒருபோக சம்பா மற்றும் தளாடி சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்தனர். தற்போது 40 நாட்களுக்கு மேல் ஆன சம்பா நெற் பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை சுற்றுப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதையடுத்து தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் கொட்டும் பனியில் சாகுபடி வயல்களில் களைப்பறிக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக வேலை இல்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளர்கள் தற்போது விவசாயப்பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர்.