தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டம், ஆலத்தூர் மற்றும் பேராவூரணி வட்டம் வளப்பிரமன்காடு, பனஞ்சேரி ஆகிய கிராமங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம், நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தஞ்சை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணைந்து நடத்தினர்.
தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த, மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை கட்டும் முறை, என்கார்சியா ஒட்டுண்ணிகளை தென்னை மரத்தில் விடும் முறை, வேப்பெண்ணெய் கரைசல் தயாரிக்கும் முறை மேலும் மைதா மாவு கரைசல் கொண்டு கரும்பூசணத்தை நீக்கும் முறைகளை கலந்துரையாடல் மற்றும் பாடல் வடிவில் விழிப்புணர்வு வாகனம் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகளை செயல்விளக்கங்கள் மூலம் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம்,, (பூச்சியியல்) உதவிப் பேராசிரியர் முனைவர் நா.முத்துக்குமரன். இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கை. குமணன், இணைப் பேராசிரியர் (நோயியல்) முனைவர் ம.சுருளிராஜன், ஆகியோர் செய்து காண்பித்தனர். இதில், கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.