சென்னை: பருவ மழை பாதிப்பை தடுக்க, மாவட்ட அளவில் பயிர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கிய விவசாயிகள் தற்போது கவலையடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு உள்ளதால், தற்போது நடந்து வரும் சாகுபடி பணிகளை முடிக்க முடியாத நிலை உள்ளது. கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை மட்டுமே திறந்து விடுகிறது.
அதை வைத்து கணக்கை மூட முயல்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கில் அதிக மழை பெய்யும் என்ற அறிவிப்பால், பயிர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
ஆனால், பல கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான ரசாயன உரங்களான டிஏபி, யூரியா, பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் போதிய அளவில் கிடைப்பதில்லை.
கூட்டுறவு பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பங்கள் பெற்றாலும், பல விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை.
பயிர்ச் சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. எனவே, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் தேவையான உரங்களை வழங்க வேண்டும்.
இவற்றை கண்காணித்து முறையாக செயல்படுத்த வேளாண்மை, கூட்டுறவு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவிலான பயிர் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்.
அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை கால்வாயை சென்றடைவதை பொதுப்பணித்துறை உறுதி செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு மாதந்தோறும் காவிரி நீரை பெற்றுத்தர தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.