நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல இடங்களில் தடுப்பணைகள் உடைந்ததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இயல்பு நிலை திரும்பியதால், குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்ததால், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் ஓரளவு தண்ணீர் காணப்பட்டதையடுத்து ஜூலை 2-வது வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன் பிறகு மாவட்டம் முழுவதும் கார் சீசன் சாகுபடியில் மும்முரமாக இருந்தது. முதலில் விவசாய பணிகள் துவங்கிய அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கொடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை முடிந்துள்ளது.
தற்போது நெல்லை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணி நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த முறை வெள்ளத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீரில் மணல் அடித்து செல்லப்பட்டு விவசாய விளைநிலங்கள் மூடப்பட்டுள்ளன.
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்த விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது மட்டுமின்றி, விவசாய நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மண் வளம் குறைந்துள்ளது. சேதமடைந்த பயிர்கள் மண்ணால் மூடப்பட்ட நிலையில் மீண்டும் சாகுபடிக்கு வயல்களை தயார் செய்வது விவசாயிகளுக்கு சவாலாக இருந்தது.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் விவசாயிகள் குளங்களில் இருந்து மண் கொண்டு வந்து வயல்களில் சமன் செய்து மீண்டும் சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்தனர். தற்போது நெல் மணிகள் செழித்து வளர்ந்து வரும் நிலையில், அறுவடைக்கு முன் மழை பெய்து எங்களை தவிக்க வைத்தது.
ஓரிரு நாள் மழை நின்றாலும், தண்ணீரை வடித்து, நெல் மணிகளை அறுவடை செய்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம். வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் கதறினர்.