நாகை: நாகை அருகே மானாவாரி பயிர்களுக்குள் கடல் நீர் புகுந்ததால் சுமார் 100 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாப ராமாபுரம் கிராமத்தில் கடலோர மழை பகுதிகளில் கடல்நீர் புகுந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
100 ஏக்கர் கடல் உப்பு நீர் புகுந்து, 20 நாட்களே ஆன இளம் நெற்பயிர்கள் அழுகத் துவங்கியுள்ளன. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளைநிலங்களுக்குள் கடல்நீர் புகாமல் இருக்க கடற்கரையோரம் கருங்கற்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.