வீட்டின் முற்றத்தில் அல்லது தொட்டியில் துளசியை வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் பராமரிப்பின் குறைவால் செடி உலர்ந்து போகலாம் அல்லது இலைகள் உதிர்ந்து விடலாம். துளசி எப்போதும் பசுமையாக இருக்க சில எளிய பராமரிப்பு முறைகள் அவசியம். மண், நீர், உரம், சூரியஒளி போன்றவை சரியாக கிடைத்தால்தான் துளசி செழித்து வளரும்.

துளசிக்கான மண் லேசாகவும் சுவாசிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மாட்டு சாண உரம், மணல், தோட்ட மண் ஆகியவற்றை சேர்த்து கலந்தால் செடிக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். தொட்டியின் அடியில் தண்ணீர் வெளியேற துளைகள் இருக்க வேண்டும்; இல்லையெனில் வேர்கள் அழுகி செடி வாடிவிடும். முளைப்பிரச்னை தவிர்க்க, உடைந்த செங்கல் துண்டுகள் அல்லது கூழாங்கற்கள் அடியில் வைக்கலாம்.
துளசிக்கு தினமும் லேசான நீர்ப்பாசனம் போதும்; அதிக தண்ணீர் ஊற்றினால் சேறு ஏற்பட்டு செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். தினமும் குறைந்தது 4–5 மணி நேரம் நேரடி சூரியஒளி கிடைக்கும்படி தொட்டியை வைத்தால் இலைகள் பசுமையுடன் இருக்கும். மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது மாட்டு சாண உரம் கொடுத்தால் செடிக்கு தேவையான சக்தி கிடைக்கும். ரசாயன உரங்களை தவிர்ப்பது அவசியம், ஏனெனில் துளசி இலைகள் மருத்துவத்திலும் வழிபாட்டிலும் பயன்படுகின்றன.
சில நேரங்களில் பூச்சிகள் தாக்கினால் ரசாயன மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வேப்பநீர் அல்லது மோர் தெளித்தால் பூச்சிகள் விலகி செடியின் ஆரோக்கியம் காப்பாற்றப்படும். இவ்வாறு எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் வீட்டுத் தொட்டியில் துளசி செடி எப்போதும் பசுமையுடன் செழித்து வளரும்.