திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜனவரி 10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அதன் மூலம் வரும் 19-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதற்காக, நாள் ஒன்றுக்கு, 14 ஆயிரம் டிக்கெட்கள் வீதம், 10 நாட்களுக்கு, 1.40 லட்சம் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு, நேற்று காலை, 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட 25 நிமிடங்களில் 1.40 லட்சம் பக்தர்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்தனர். இந்த டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதளத்தில் ஒரே நேரத்தில் பெற 14 லட்சம் பக்தர்கள் முயற்சித்த நிலையில், இணையதள சேவை அதிவேகமாக இருப்பதால் 1.40 லட்சம் பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்பதிவு செய்தனர்.
இதனால் பல பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சுமார் 91 கவுன்டர்களில் இதே சர்வ தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வரும் 8-ம் தேதி காலை முதல் தொடர்ந்து வழங்கப்படும். அதன்பின், வரும் 13-ம் தேதி முதல் வழக்கம் போல், தற்போதுள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி வளாகத்தில், அந்தந்த நாட்களுக்கான இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
எனவே, இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் மற்றும் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மற்றும் ஸ்ரீவாணி டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே இந்த 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்.