பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபானி சுவாமி மலைக்கோயிலில் உள்ள முருகன் சிலை நவபாஷாணத்தை பயன்படுத்தி போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாகும்.
நீதிமன்ற உத்தரவுப்படி, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலையை பாதுகாத்து பராமரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான குழு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி ஆதீனம் குமரகுருப சுவாமிகள், பழனி கோயில் முன்னாள் இணை ஆணையர் நடராஜன், இணை ஆணையர் பழநி கோயில் மாரிமுத்து, ஐஐடி பேராசிரியர் முருகையா ஆகியோர் நேற்று பழநி கோயிலின் மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனால் மலைக்கோயிலில் 3 மணி நேரம் தரிசனம் தடைபட்டது. குழுத் தலைவர் பொங்கியப்பன் நிருபர்களிடம் கூறும்போது, “இது தொடர்பாக அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.