திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலையின் புனிதம் மற்றும் ஆன்மீக சூழலை பாதுகாக்கும் வகையில், திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு தடை விதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
கலியுகத்தின் வைகுண்டம் என்று போற்றப்படும் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் எப்போதும் ஒலிக்கும் திருமலையில், சுவாமி தரிசனம் செய்ய வரும் சில அரசியல் தலைவர்கள், தரிசனம் முடிந்ததும் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்திக்கின்றனர். பிறகு அரசியல் பேச்சுகளையும் விமர்சனங்களையும் செய்கிறார்கள். இது போன்ற அரசியல் பேச்சுக்களும் விமர்சனங்களும் திருமலையில் ஆன்மிகச் சூழலை சீர்குலைத்து வருகின்றன.
இந்நிலையில் திருமலையில் அரசியல் பேச்சுக்கு தடை விதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே இதனை மனதில் கொண்டு திருமலைக்கு வந்து இறைவனை தரிசனம் செய்பவர்கள் திருமலையின் ஆன்மிகச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் அரசியல் உள்ளிட்ட விமர்சனக் கருத்துகளை கூறுவதை தவிர்த்துக் கொண்டு ஆலயத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.