தஞ்சாவூர்: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையாருக்கு நாளை 15-ம் தேதி பச்சரிசி, காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப் பெரிய லிங்கத்திருமேனியாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கும் அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.