சென்னை: விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று, ரசாயனக் கலவை இல்லாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும், ஒலிபெருக்கிகள் வைக்க காவல் துறை அனுமதி பெற வேண்டும்.
எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்பதை மின்வாரியத்திடம் தெரியப்படுத்த வேண்டும், பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் வைக்கக் கூடாது, பிற மத மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது, சிலை வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.