தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் அமைந்து ஏகெளரி அம்மன் கோயிலில் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் நடக்கும் தீமிதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடந்தது.
தஞ்சை அருகே வல்லம் ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் பல்வேறு காவடிகள் எடுத்து வந்து தீக்குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.
தஞ்சாவூர் நகரம் தோன்றுவதற்கு முன்பே வல்லம் தான் சோழர்களின் தலைநகராக விளங்கியது. அப்போது முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோயில்தான் வல்லம் ஏகௌரியம்மன் கோயில். சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும், வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகௌரியம்மன்.
சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகைச் சூடப் போர்க்களம் செல்லும் போதும் இந்தத் தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது. காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி நேற்று மதியம் நூற்றுக்கணக்கானோர் வல்லம் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள வஜ்ஜிரதீர்த்த குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் , செடில்காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதை ஒட்டி வல்லம் பகுதியே திருவிழா கோலம் பூண்டிருந்தது.
பின்னர் கோயிலில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் பரவசத்துடன் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை முதல் சிறப்பு தரிசனமும் நடைபெற்றது தீமிதி திருவிழாவை முன்னிட்டு வல்லம் டி.எஸ்.பி., நித்யா தலைமையில், வல்லம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அதேபோல் சுகாதாரப்பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.