சென்னை: பக்தர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது சதுரகிரி பெயர் காரணம். சதுர்’ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன.
சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி, குபேர கிரி, சிவகிரி, சக்தி கிரியும், மேற்கே விஷ்ணுகிரி, சந்திர கிரியும், வடக்கே கும்ப கிரி, மகேந்திர கிரி, இந்திர கிரி, சஞ்சீவி கிரியும், தெற்க்கே பிரம்மகிரி, சித்திகிரி, இராம கிரி, உதய கிரியும் இருக்கிறது.
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.
தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு ‘சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.