ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் வழிபாடு செய்து கூழ் ஊற்றும் காரணம் பற்றிய தகவல்களை புதுக்கோட்டை மாவட்ட கோவில் அர்ச்சகர் பாலாஜி விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான மாதம் ஆடி மாதம் ஆகும். குறிப்பாக இது தெய்வ வழிபாட்டிற்குரிய மாதமாக பார்க்கப்படுகிறது.
தட்சிணாயனம், உத்திராயனம் ஆகியவை கூடும் மாதம் என்பதால் இந்த மாதம் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம், நேர்த்திடன் செய்வதற்கும் உரிய மாதமாகும். தெய்வங்களை மட்டுமின்றி முன்னோர்களை வழிபட்டு, தர்ம, கர்ம காரியங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் என சொல்லப்படுகிறது. பொதுவாகவே சக்தி பீடம் என்று அழைக்கப்படக்கூடிய அம்பாள் திருத்தலங்கள் ஆடி மாதம் மிக விசேஷமாக கருதப்படும். காரணம் ஒரு வருடத்தில் இரண்டு புண்ணிய காலம் என்று சொல்லக்கூடிய தட்சிணாயனம் உத்திராயனம் தட்சணாயன காலமானது ஆடி மாதத்தில் ஆரம்பிக்கும். தட்சிணாயன புண்ணிய காலம் என்பது பொதுவாகவே ஆலய வழிபாடுகளுக்கு உகந்தது.
நம்முடைய கலாச்சாரத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள். பொதுவாகவே பூமியின் சுற்றுப் பாதைகளிலும், சூரியன் ஓட்டத்திலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் இயல்பாகவே சக்தி பீடங்களில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். இந்த காரணத்தினால் பொதுவாகவே ஆடி மாதத்தில் ஆலய வழிபாடு தொடங்குவது சிறந்தது .மாரி என்றால் மழை முத்துமாரி என்றால் மழையை கொடுக்கக் கூடிய தெய்வங்கள். விவசாயத்தை செய்யக்கூடிய விவசாயிகள் ஆத்மார்த்தமாக தாங்கள் விளைவிக்கும் தானியங்களை கொண்டு அவர்கள் பயன்படுத்தி ருசித்து வந்த உணவை கொடுத்து அம்பாளை வழிபட செய்வதே இந்த அம்மாளுக்கு கூழ் காட்சி நெய்வேத்தியம் செய்வது ஆகும்.
இந்த கலாச்சார பாரம்பரிய வழக்கமாக மாறியது அதன் பொருட்டு அம்மன் ஆலயங்களில் ஆடி மாதங்களில் கஞ்சி கூழ் என்று அழைக்கப்படக்கூடிய சிறுதானியங்களும், அரிசியும் கொண்டு செய்யக்கூடிய நெய்வேத்தியம் ஆத்மார்த்தமாக தனது உணவை அம்மாளுக்கே கொடுத்து இனி வரக்கூடிய வருடங்களிலும் மழையானது நிறைவாக கிடைத்து விவசாயம் செழிப்படையும் எல்லோரும் சுபிட்சமாக வாழவும் அம்மாளுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு அம்பாளுக்கு அர்ப்பணிப்பதே அம்மாளுக்கு கூழ் ஊற்றும் காரணம் ஆகும்.
அறிவியல் பூர்வமாக சொல்லப்போனால் இந்த ஆடி மாதம் என்பது ஆலய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாக பார்க்கப்படுகிறது. அதாவது தை மாதம் இருந்து ஆனி மாதம் வரை வீட்டில் சுபகாரியங்கள் செய்யும் மாதமாகும். கிரகப்பிரவேசம், காதணி விழா போன்ற விசேஷங்கள் செய்வோம்.
அதனை தொடர்ந்து ஆடி மாதத்தில் தட்சணாயன காலத்தில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் அதாவது உயிரினம் புதிதாக வளர்வதற்கு ஏற்ற காலமாகும். அதே நேரத்தில் இந்த காலத்தில் சக்தி பீடம் என்று சொல்லக்கூடிய சூரிய கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்றும் சக்தி வீச்சு என்பது அதிகமாக இருப்பதால் அதனை குறைப்பதற்காக மக்கள் அனைவரும் கோவிலில் கூடி கூட்டு வழிபாடு செய்து அதன் பின்னர் குளிர்ச்சியான கூழ் பிரசாதத்தை சாப்பிட்டு வந்தனர். இவ்வாறு செய்வதனால் சக்தி வீச்சு குறைவாகும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அத்தோடு இந்த ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் சித்திரை மாதத்தில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கும் போது சூரியன் அந்த மாதத்தில் உச்சத்தில் இருக்கும். அதனால் அந்த கதிர்வீச்சு கர்ப்பப்பையை தாக்கி அது குழந்தையை பாதிக்கும் என்பதனால் இந்த ஆடி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று கடைபிடித்து வந்தார்கள். இவ்வாறு முன்னோர்கள் பல்வேறு பாரம்பரிய முறைகளை கடைபிடித்து வந்தனர். எனவே தான் இந்த ஆடி மாதத்தில் ஆலய வழிபாடும் கூட்டு வழிபடும் சிறந்ததாக விளங்கி வருகிறது.