குமுளி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதையடுத்து, புல்மேடு, முக்குழி வனப் பாதைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக தற்போது பக்தர்கள் அனைவரும் எருமேலி, பம்பை வழியாக சன்னதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், பம்பை ஆற்றில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கண்காணிப்பு அடிப்படையில் நீராடுகின்றனர். எனினும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டால் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழை, பனி, மூடுபனி காரணமாக நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து பக்தர்களை காக்க தேவசம் போர்டு சுக்கு கலந்த மூலிகை சுடுநீரை வழங்கி வருகிறது.
நடை பந்தல் மற்றும் சன்னதியில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது வழங்கப்படுகிறது. குளிர் மற்றும் பனியால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தடுக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. டோலிகளுக்கு புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நடக்க முடியாத பக்தர்களை பம்பையில் இருந்து டோலிகள் மூலம் சன்னதிக்கு ஏற்றிச் செல்லப்படும். இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தேவசம் போர்டு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 100 கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இனி இவற்றை ப்ரீபெய்ட் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.