திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் அக்., 4-ல் துவங்கியது. இதையொட்டி தினமும் மாலை மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
நவராத்திரி விழாவின் 7-ம் நாளான நேற்று அன்னை திருவடி சேவை நடந்தது. இதனை முன்னிட்டு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கொலுமண்டபம் வந்து பக்தர்களுக்கு திருவடி காட்சி அளித்தார்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய கொலை 9.30 மணிக்கு முடிந்தது. ரங்கநாச்சியார் அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தாயார் திருவடியை தரிசிக்க முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். நவராத்திரி உற்சவம் நாளை (அக்.12) நிறைவடைகிறது.