தேனி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவ.,16 முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை வழிபாடு நடக்கிறது. தினமும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 96,853 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் வரும் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.
இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்படுகிறது. பல இடங்களில் பக்தர்கள் தரிசனம் முடிந்து தேர் 25-ம் தேதி மதியம் பம்பைக்கு சென்றடையும்.
இங்குள்ள கணபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த பேழை வைக்கப்படும். பின்னர் இந்த பேழை தலைச்சுமையாக சன்னதிக்கு கொண்டு செல்லப்படும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் தங்க அங்கி பெட்டகத்தில் வைக்கப்படும். 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு தங்க அங்கிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடக்கிறது.
அன்றைய தினம் மண்டல பூஜை முடிவடையும் என்பதால் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக, டிச., 30-ம் தேதி மாலை, 5 மணிக்கு கோவில் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மண்டல பூஜையின் போது, சன்னதியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் ஸ்பாட் புக்கிங் மூலம் தலா 5,000 பக்தர்களையும், ஆன்லைன் பதிவு மூலம் 60,000 பக்தர்களையும் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.