திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை முடிந்து, கடந்த 26ம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டர ராஜீவர் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதையடுத்து மேல்சாந்தி ஆழியில் தீ மூட்டினார்.
நேற்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கும். இன்று முதல் கணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடக்கிறது.
சபரிமலை கோவில் நடை ஜனவரி 19-ம் தேதி வரை திறந்திருக்கும்.அன்றிரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20-ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் மண்டல மகரவிளக்கு காலம் முடிவடைகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.
இன்று முதல் ஜனவரி 11-ம் தேதி வரை ஆன்லைனில் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.