சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள்.
பின்னர், தினமும் பூஜைகள் செய்யப்பட்டு, அந்தந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
இதனிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கண்ணன் (தெற்கு), ஆர்.சுதாகர் (போக்குவரத்து), நரேந்திரன் நாயர் (வடக்கு) ஆகியோர் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா, பாரத் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கலந்தாய்வில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு போலீஸார் அளிக்கும் அறிவுரைகள்:-
விநாயகர் சிலைகளை வைத்திருக்கும் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை அல்லது அரசுத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
தீயணைப்புத் துறை, மின்சார வாரியத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெற்று, விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க உறுதியளித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
நிறுவப்படும் சிலையின் உயரம் அடிவாரத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகே சிலைகள் நிறுவுவதைத் தவிர்க்க வேண்டும்.
மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் கூச்சலிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் இடமளிக்கக் கூடாது.
காவல் துறையினர் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கும் நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகள், சரிவுகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை போலீஸார் வழங்கினர்.