தேனி: 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு மாலை 6.25 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, பொன்னம்மபல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இந்த நிகழ்வையொட்டி, நேற்று எருமேலியில் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றது. ஐயப்பனுக்கு மேற்கொள்ளப்படும் திருவாபரணம் இன்று பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து மேற்கொள்ளப்பட்டு 14-ம் தேதி சன்னதியை அடையும்.
ஊர்வலத்தை தேவசம்போர்டு பாரம்பரிய முறையில் சாரங்குத்தியில் வரவேற்கும். கோயிலுக்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ராஜீவரரு மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள். மாலை 6.30 மணிக்கு ஐயப்பரின் மீது திருவாபரணம் வைக்கப்பட்ட பிறகு, பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் நடைபெறும்.
இது தொடர்பாக, தேவசம்போர்டு அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், அட்டதோடு முதல் நீலிமலை செல்லும் சாலை பழுதுபார்க்கப்பட்டுள்ளது. பம்பை மற்றும் நுணங்கன் இடையே ஒரு தற்காலிக பாலமும் கட்டப்பட்டுள்ளது. நெரிசலைத் தவிர்க்க, 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு மூலம் தலா 50,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கவும், ஸ்பாட் புக்கிங் மூலம் 1,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகர ஜோதி நாளில் புல்மேடுவில் நெரிசல் ஏற்படும் என்பதால், இடுக்கி மாவட்டத்துடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐயப்பன் கோயிலில் இன்றும் நாளையும் சுத்திகிரி பூஜை நடைபெறும். மகரவிளக்கு பூஜையின் போது திருவாபரணம் அணிந்தபடி 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஐயப்பனை தரிசனம் செய்யலாம். 19-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20-ம் தேதி காலை 6.30 மணிக்கு பந்தள அரச குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கோயில் மூடப்பட்டு மகரவிளக்கு பூஜை நிறைவடையும்.