சென்னை: அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மார்கழி மாத அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை மற்றும் மாலையில் லட்சார்ச்சனையும், 28-ம் தேதி சந்தனகாப்பு மாலை தரிசனமும் நடந்தது. அனுமன் ஜெயந்தியையொட்டி இன்று காலை சிறப்பு திருமஞ்சனம், 7-ம் கால யாகம், மஹாபூர்ணாஹுதி, கடம்புறப்பாடு, மாலை 4 மணி முதல் சிறப்பு அலங்கார தரிசனம், தொடர்ந்து லட்சார்ச்சனை நடக்கிறது.

தொடர்ந்து, நாளை முதல் ஜன., 2 வரை லட்சார்ச்சனையும், 2-ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. இதேபோல் அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபையில் அதிகாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு வெள்ளி கவச தரிசனமும், பின்னர் ஏகாதிக லட்சார்ச்சனையும் நடைபெறும்.
முன்னதாக அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபையில் ஆஞ்சநேயர் சிறப்பு லட்டு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னையில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது.