திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 6 வாரங்கள் இங்கு வந்து குத்துவிளக்கேற்றி வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கொடி மரத்தில் கொடியேற்றினர்.
பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு தீப தூப பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆறு நாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார உற்சவம் வரும் 7-ம் தேதி முருகப்பெருமான் வலம் வருகிறார். விழா முடிவில் முருக வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் வரும் 8-ம் தேதி நடக்கிறது.