திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் நவ., 16-ல் துவங்கியது. 41 நாட்கள் நடக்கும் மண்டல கால பூஜை, பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நாளை நிறைவடைகிறது. மண்டல பூஜையையொட்டி, ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி அணிவிப்பது வழக்கம். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் இந்த தங்க அங்கி இன்று மதியம் பம்பை சென்றடைகிறது.
பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்பட்ட பின், கருவறைக்கு எடுத்துச் செல்லப்படும். மாலையில் சரங்குத்தியில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தங்க அங்கி ஊர்வலம் வரவேற்கப்படுகிறது. பின்னர் இந்த தங்க அங்கி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பன் சிலை மீது வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும். பிரசித்தி பெற்ற மண்டல பூஜைகள் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். வழக்கமான பூஜைகள் முடிந்து இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நாளையுடன் நிறைவடைகிறது. மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அதுவரை சபரிமலை கோவில் 3 நாட்களுக்கு மூடப்படும்.
மண்டல பூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று 50 ஆயிரம் பேரும், நாளை 60 ஆயிரம் பேரும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த நாட்களில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சபரிமலையில் நேற்று முன்தினம் 1,06,621 பேர் தரிசனம் செய்தனர். சபரிமலை கோவிலின் வரலாற்றில் மண்டல காலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.