சென்னை: மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கைப்பிடி மஞ்சளை ஒரு குழந்தையின் கையால் பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார் தான்!
எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது மரபு. எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மஞ்சள் பிள்ளையார்: நல்ல காரியங்களை தொடங்கும்போது, மங்களகரமாக நடைபெற, ஒரு கைப்பிடி மஞ்சளை, பிள்ளையாராக பிடித்து வைப்பது வழக்கம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.
குங்குமப் பிள்ளையார்: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
புற்றுமண் பிள்ளையார்: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரத்தை பெருக வைப்பார்.
வெல்லப் பிள்ளையார்: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். வளம் தருவார்.
உப்பு பிள்ளையார்: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.
வெள்ளெருக்கு பிள்ளையார்: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.
விபூதி பிள்ளையார்: விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.