சென்னை: நடிகை சுனைனாவின் முகத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரித்து போலி வீடியோ பரப்பப்பட்டதாக எழுந்துள்ள புகார் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுனைனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது முகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது கவனத்துக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயல்கள் தனது தனியுரிமை, கண்ணியம் மற்றும் அடையாளத்தை மீறுவதாகவும், இதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
போலி வீடியோவை உருவாக்கியவர்கள் மட்டுமின்றி, அதை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் மற்றும் பகிர்பவர்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பகிரப்பட்டிருந்தால் அதை நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படம் அல்லது முகத்தை அனுமதியின்றி மாற்றுவது தொடர்பாகத் திரையுலகினர் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகப் பெண்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துவது இணையவழித் துன்புறுத்தல் மற்றும் தனியுரிமை மீறல் தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
