சென்னை: கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்ன ஆகும் என்ற வித்தியாசமான கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஜிம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
ஹாரர்–பேண்டஸி கலந்த புதுமையான கதை
ஹாரர், பேண்டஸி மற்றும் அறிவியல் புனைகதை அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி உள்ளிட்ட பல புதிரான கதாபாத்திரங்கள் கதையில் இடம்பெற்றுள்ளன.
வெளியாகியுள்ள போஸ்டர்களில் அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை மற்றும் வௌவால்கள் இடம்பெற்று திகில் சூழலை ஏற்படுத்துகின்றன.
மற்றொரு போஸ்டர் அறிவியல் புனைகதை உலகத்தை பிரதிபலிக்கும் வகையிலும், மூன்றாவது போஸ்டர் சூனியக்காரி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் யார்?
சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி எஸ்.ஆர். இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
