தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா, தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏரோபிளேன்’ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்தப் பாடலை முகேஷ் முகமது பாடியுள்ளார். ராகேந்து மௌலி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
ஏற்கெனவே வெளியான முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இரண்டாவது பாடலும் உற்சாகமான இசையுடன் வெளியாகியுள்ளது. பாடலில் சூர்யா மற்றும் நஸ்ரியா இடம்பெறும் காட்சிகள் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதே நேரத்தில், அவர்களது கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவில் என்ன மர்மம் இருக்கிறது என்ற கேள்வியையும் பாடல் எழுப்புகிறது.
பாடலின் காட்சியமைப்பில் வீடியோ கேம் போன்ற பின்னணி பயன்படுத்தப்பட்டுள்ளது. சூர்யாவின் நடன அசைவுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சூர்யாவின் 47-வது படமாக உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் நஸ்லென், ஆனந்த்ராஜ், லால் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜித்து மாதவன் மற்றும் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இருவருக்கும் இது தமிழ் சினிமாவில் முக்கியமான அறிமுகப் படமாக அமைகிறது.
ஜகரம் ஸ்டூடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
