சென்னை: கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான மலையாள திரைப்படம் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’, தமிழில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.
நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
ஒரு கிராமத்து மக்களின் கால்பந்து மீதான ஆர்வத்தை மையமாகக் கொண்ட இப்படம், தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
பீனிக்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.அசோக் படத்தை வெளியிடுகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், கால்பந்து விளையாட வேண்டும் என்ற தீராத ஆர்வம் கொண்ட 12 வயதுக்குட்பட்ட சிறார்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் ஆண்டனி வர்கீஸை தங்களது ரோல் மாடலாக கருதுவதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
