சென்னை: பிரபுதேவா–ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மனோஜ் என்.எஸ். இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன், யூடியூபர் சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைத்துள்ள ரஹ்மான், இப்படத்தின் 6 பாடல்களையும் பாடியுள்ளார். மேலும், இயக்குநர் கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் பிரபுதேவா நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருந்த இப்படம் கடந்த மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில், தற்போது வெளியான புதிய போஸ்டரில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், தீபாவளி ரேஸில் களமிறங்கும் முதல் தமிழ் படமாக ‘மூன்வாக்’ அமைந்துள்ளது.
