சென்னை: நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளான செப்டம்பர் 7-ம் தேதி, தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் மம்முட்டி இடம்பெறும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப் படம், இதுவரை ‘தனுஷ் 55’ என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது ‘ஓம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் தலைப்பு போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தீம் இசையை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட நிலையில், தனுஷின் பிறந்த நாளையொட்டி ‘அலாக்கா லோவா’ என்ற முதல் பாடலும் வெளியானது.
இந்நிலையில் மம்முட்டியின் பிறந்த நாளான செப்டம்பர் 7-ம் தேதி ‘ஓம்’ படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
