சென்னை: ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘கொஞ்சி கொஞ்சி’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதியம் 12.30 மணிக்கு இந்த பாடல் வெளியாகிறது.
இசைஞானி இளையராஜாவின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன், இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
வெங்கட் பிரபு – யுவன் கூட்டணி
இளையராஜாவின் குடும்ப வாரிசை திரையுலகில் அறிமுகம் செய்யும் இந்த திரைப்படத்தில், அவரது குடும்பத்துடன் நீண்ட காலமாக நெருக்கமாக பயணித்து வரும் வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளது.
படத்தின் கதையை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என். சுப்ரமணியம் மேற்கொள்கிறார்.
எலிபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
நட்சத்திர பட்டாளம்
ஜெயனுக்கு ஜோடியாக சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ராஜிந்த், ராம்குமார், மீனா, திலகவதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வரும் ஜெயன், முற்றிலும் புதிய கதாநாயகனாக களமிறங்குவதால் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்கனவே உருவாகியுள்ளது.
இளையராஜாவின் இசைப்பயணம்
இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் முதல் பாடலான ‘கொஞ்சி கொஞ்சி’ நாளை மதியம் 12.30 மணிக்கு வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
