மும்பை: நயன்தாரா மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சல்மான் கானுடன் அரவிந்த் சாமி, ஜாக்கி ஷெராப், ராகுல் தேவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2027-ம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு ‘மான்ஸ்டர்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே படத்தின் வியாபாரம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மான்ஸ்டர்’ படத்தின் இந்திய அளவிலான திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொகை திரும்பப்பெறக்கூடிய முன்பணமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா – சல்மான் கான் என்ற இரு பெரிய நட்சத்திரங்கள் இணைந்திருப்பது மட்டுமின்றி, ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இப்படத்தை இயக்குவதால், ‘மான்ஸ்டர்’ மீது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், பான் இந்தியா சந்தையை கருத்தில் கொண்டு படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
