சென்னை : நடிகர் ஆதி நடித்து நேற்று வெளியான சப்தம் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1 கோடி என்று தெரியவந்துள்ளது.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து ‘சப்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.
இந்த படத்தில் ஆதி, ‘ரூபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மாயா மாயா’ சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தர தாமதம் ஏற்பட்டதால் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திட்டமிட்டமிபடி பிப்ரவரி 28ம் தேதி வெளியாகாமல், நேற்று(மார்ச் 1-ந்தேதி) திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், சப்தம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது.