இவர் நடித்த படங்கள் அனைத்தும் சமீபகாலமாக ஹிட் லிஸ்டில் உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் பகத் பாசில் மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இவர் பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார். தற்போது பகத் பாசில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் கைவசம் தமிழ் மற்றும் மலையாள படங்கள் உள்ளது.
இந்த நிலையில், நடிகர் பகத் பாசில் மீது கேரள மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ள வழக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பகத் பாசில் தற்போது ‘பிங்க்கேலி’ என்ற படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாலி அரசு மருத்துவமனையில் நடத்தினார். இரவு முழுவதும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதால் அங்குள்ள நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
மேலும், எமர்ஜென்சி அறையிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது மற்றோரு பக்கம் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றும், இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளை கூட எமர்ஜென்சி வார்டுக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள் என்றும் பல நோயாளிகள் புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து கேரள மனித உரிமை ஆணையம் நடிகர் பகத் பாசில் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது. இதனால் விரைவில் விசாரணையை நடிகர் பகத் பாசில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.