சென்னை: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்றுதான் அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.
அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர். இவர், கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நான்காம் கட்ட புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிதி நெருக்கடியுடனும் போராடி வந்தார்.
அதனால், நிதி நெருக்கடி காரணமாக அவரது குடும்பத்தினர் திரைத்துறையினரிடமும், தமிழக அரசிடமும் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.