சென்னை: கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் சினிமாவில் அறிமுகமானாலும் கடுமையான விமர்சனங்களை சந்திக்கவே செய்தார். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் தனது திறமையை வளர்த்துக்கொண்டு இன்று டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கும் அவருக்கு இன்று 49ஆவது பிறந்தநாள். இந்தச் சூழலில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிரது.
நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் விஜய்யுடன் தோன்றிய சூர்யாவை பலரும் விமர்சிக்கவே செய்தனர். நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை என பலர் நேரடியாகவே கூறினர். இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.
மாற்றம் தந்த நந்தா: நேருக்கு நேர் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த சூர்யாவுக்கு நந்தா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. பாலா இயக்கியிருந்த அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க படமும் மெகா ஹிட்டானது. அந்த இரண்டு படங்களும்தான் சூர்யாவுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தன. முன்னணி ஹீரோ: அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்கவும் செய்தன. இப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்குள் மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தன. பல படங்கள் அவரது பெயர் சொன்னாலும் சிங்கம் படம்தான் அவரை கொண்டுபோய் கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தில் நிறுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானது.
நிஜத்திலும் ஹீரோ: திரையில் மட்டும் ஹீரோவாக நடிக்காமல் நிஜத்திலும் ஹீரோ என்பதை அகரம் ஃபவுண்டேஷன் மூலம் நிரூபித்தார். ஏழை, எளிய குழந்தைகளை படிக்க வைக்கும் உன்னதமான சேவையை இன்றுவரை அகரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய திட்டங்கள் ஏதேனும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து காத்திரமாக குரல் கொடுக்கக்கூடியவரும் சூர்யாதான்.
ஜெய் பீம்: அவரது திரைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுவது ஜெய் பீம் திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சூர்யா. அதுபோன்ற கதையில் சூர்யா நடித்ததால் பெரும் அளவு மக்களிடம் சென்று சேர்ந்தது. மேலும் சூர்யா போல் முன்னணி ஹீரோக்கள் இதுமாதிரியான கதையில் நடிக்க வேண்டும் எனவும் பலர் கூறினர்.
அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படமும் மெகா ஹிட்டாகி அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சூர்யா. இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்.
சூழல் இப்படி இருக்க அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 150லிருந்து 200 கோடி ரூபாய்வரை சொத்து இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்துக்கு 20லிருந்து 25 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள BMW 7 Series, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள AUDI Q7, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் எம் க்ளாஸ் போன்ற சொகுசு கார்கள் இருக்கின்றன. மேலும் இப்போது மும்பையிலும் வீடு வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.