சென்னை: திரைப்பட தயாரிப்பு நிறுவன ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உட்பட 6 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (27). இவர் தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அந்நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயர் வீட்டில் அவ்வப்போது சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பார்வதி நாயர், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகம் ஏற்பட்டு, தனது விலை உயர்ந்த கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் ஆகியவை திருடு போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர். பின்னர், வெளியே வந்து மீண்டும் அதே படத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் நிறுவனத்திற்கு வந்து சுபாஷ் சந்திரபோஸை தாக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் தேனாம்பேட்டை போலீசார் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுபாஷ் சந்திரபோஸின் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் நடிகை பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் இளங்கோவன், செந்தில், அருள்முருகன், அஜித் பாஸ்கர், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.