சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது நடிப்பைத் தாண்டி கார் பந்தய உலகிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் அவரது காரில் தமிழக அரசின் லோகோ பதிக்கப்பட்டிருந்தது. இதை ரசிகர்களும் பொதுமக்களும் கவனித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதுகுறித்து நடிகர் அஜித்குமார் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

அஜித் கூறுகையில், “தமிழக அரசின் லோகோவை பயன்படுத்தியதற்கு காரணம், நான் பங்கேற்ற போட்டி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு முக்கியமானது. அந்தப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரராக என் மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அந்த லோகோவை சேர்த்தேன். இது எந்தவித அரசியல் நோக்கத்துடனோ அல்லது அதிகாரப்பூர்வ ஒப்புதலோடு சம்பந்தப்பட்டதல்ல,” என்றார்.
மேலும் அவர், “தமிழக அரசு கலை, விளையாட்டு, கல்வி, தொழில் என பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் நானும் என் மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதைச் செய்தேன். நான் எப்போதும் தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த விளக்கம் தற்போது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. சிலர் “இது உண்மையான தேசப்பற்று மற்றும் மாநில அன்பை காட்டும் செயல்” எனக் கூறுகின்றனர். அஜித்தின் கார் பந்தய சாதனைகள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அவரது இப்புதிய விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.