சென்னை : குட் பேட் அக்லி படத்தின் டீசரில் நடிகர் அஜித் அணிந்து வந்த சட்டையின் விலை ரூ 1.80 லட்சம் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 28-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என சாதனை படைத்துள்ளது. இந்த டீசரில் அஜித் பல கெட்டப்பில் தோன்றி இருந்தார். அதில் நடிகர் அஜித்குமார் அணிந்திருந்த சட்டை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தநிலையில் அந்த சட்டையின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சட்டையின் விலை சுமார் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.