‘கேம் சேஞ்சர்’ குறித்த தனது கருத்துக்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘தண்டேல்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் ‘கேம் சேஞ்சர்’ பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தில் ராஜு தனது வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இரண்டையும் ஒரே வாரத்தில் பார்த்துள்ளார். ‘கேம் சேஞ்சர்’, ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ ஆகிய படங்களின் வசூல் குறித்து அல்லு அரவிந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த பதில் ராம் சரண் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தண்டேல்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பார்ப்பவர்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அல்லு அரவிந்திடம் மீண்டும் ‘கேம் சேஞ்சர்’ பற்றி கேட்கப்பட்டது. இதற்கு, “சமீபத்தில், ஒரு மூத்த பத்திரிகையாளர் என்னிடம் ‘கேம் சேஞ்சர்’ பற்றி கேட்டார்.
நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பினேன். ஒரு வாரத்திற்குள் தில் ராஜு ஏற்றத் தாழ்வுகளைக் கண்டார் என்று சொல்ல விரும்பினேன். ஆனால் நான் அதை தவறான வார்த்தைகளில் சொன்னேன். ராம் சரண் பற்றி தவறாக பேசி என்னை விமர்சிக்கிறார்கள். நான் கூறிய தவறான வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சரண் என் மகன் மாதிரி. நாங்கள் ஒரு அழகான உறவைப் பகிர்ந்து கொள்கிறோம். எனவே, இந்த சர்ச்சையை விட்டுவிடுங்கள். நான் கூறியது தவறு என்பதை உணர்ந்து அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.