சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது_ இந்த மனு இன்று விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படம் பொங்கலையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. ‘ஜன நாயகன்’ படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படமும் வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு தொடர்பான மனுவில், தணிக்கை குழு அறிவுறுத்திய காட்சிகளை நீக்கியும் இதுவரை தணிக்கை சான்று வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்த நீதிமன்றம் இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.