ஐதராபாத்: பாலையா நடித்துள்ள அகண்டா 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு சிக்கல் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘அகண்டா’ படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷான் சக்சேனா தயாரித்து, போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘அகண்டா 2’ பால கிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார்.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. இப்படம் பல மொழிகளில் நாளை வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘அகண்டா 2’ படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறினால் இந்தியாவில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டபடி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.