சென்னை: நகைக்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திரம் என்று பல்வேறு வகையிலும் தனது திறமையை காட்டிய கோலிவுட் நட்சத்திரம் டெல்லி கணேஷ் காலமானார்.
ஆகஸ்ட் 1, 1944 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் கணேஷ். இவர் தக்ஷிண பாரத நாடக சபா என்ற ‘டெல்லி’ நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 1964 முதல் 1974 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றி இருக்கும் டெல்லி கணேஷ் 1977 ஆம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
பட்டினப்பிரவேசம் திரைப்படத்தை மறைந்த பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் துணை நடிகர், நகைச்சுவை வேடங்களாக அமைந்தது. இடையில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து டெல்லி கணேஷ் அனைவரையும் கவர்ந்தார்.
இதுதவிர, சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி மற்றும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் டெல்லி கணேஷ்.
திரைப்படங்கள் மட்டுமின்றி டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது” பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1977 ஆம் ஆண்டு அறிமுகமான டெல்லி கணேஷ் உயிரிழக்கும் வரையிலும் திரைத்துறையில் இயங்கி வந்தவர் ஆவார். 47 ஆண்டுகால திரைப் பயணம் கொண்ட டெல்லி கணேஷ் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.