கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்நீரா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “காதல் படங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அந்த வகையில் இந்த படம் காதலை மையமாக வைத்து மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் படமாக்கப்பட்டு இங்கு வெளியாகிறது. அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
சிறு படங்கள் ஓடவில்லை என்கிறார்கள். சிறு படங்களை பார்க்க யாரும் திரையரங்கிற்கு வருவதில்லை என்று சினிமாவில் சொல்கிறார்கள். இதற்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும். சினிமா பெரும் ஆபத்தில் உள்ளது. இன்று சிறிய படங்களை பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டர்கள் இல்லை. படம் சரியான நேரத்தில் வந்தால்தான் மக்கள் வருவார்கள்.
பெரிய ஹீரோ படங்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. சிறிய படங்களை மக்கள் பார்க்க என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் அபரிமிதமான விலையில் உள்ளன. மறுபுறம், கார் பார்க்கிங் பணம் பறிக்கப்படுகிறது. இப்படி இருந்தால் மக்கள் எப்படி வருவார்கள்? எங்களை விமர்சிப்பதற்காக மக்களை குறை சொல்லக்கூடாது,” என்றார்.