சென்னை: பாட்டல் ராதா படவிழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த பேச்சுக்கு இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாட்டல் ராதா பட விழாவில் மது பழக்கத்தை கொண்டாடும் விதமாகவும் சாராயம் காய்ச்சும் தொழில்நுட்பம் தனக்கு தெரியும் என்றும் பேசினார் இயக்குனர் மிஷ்கின். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் படம் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது. வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் ‘பேட் கேர்ள்’ படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, ‘‘என்னை விமர்சித்த பாடலாசிரியர் தாமரை, இயக்குனர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ், லெட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு ஆகியோருக்கு எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.
‘பாட்டல் ராதா’ புரொமோஷன் மேடையில் ஜோக்காக நான் பேசியதில் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறாகிவிட்டது. ஆனால், ஒரு நகைச்சுவையை நீங்கள் நகைச்சுவையாகத் தான் பார்க்க வேண்டும். மூன்று நாட்களாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள்.
என் படங்கள் நல்ல படம் இல்லையா? அவை சமூக கருத்துக்களை சொல்லவில்லையா? நான் சினிமாவையும், மனிதர்களையும், இயற்கையையும் நேசிப்பவன். மன்னிப்பு கேட்பதற்கு எப்போதுமே தயங்க மாட்டேன் என்றார். விழாவில் வெற்றிமாறன், அனுராக் கஷ்யப், டாப்ஸி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்பட பலர் பங்கேற்றனர்.