சென்னை: 50 ஆண்டு திரை உலக பயணம் செய்த கன்னடத்து பைங்கிளியை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தது எப்படி என்று தெரியுங்களா?
சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 50 ஆண்டு காலமாக திரைப்படத் துறையில் இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரசுவதி’ போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார்.
‘கன்னடத்துப் பைங்கிளி’ – தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜா தேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜா தேவி. படம் மிகப்பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பின்னர் 2-வது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார். சரோஜா தேவி, நாடோடி மன்னன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குநர் கே.சுப்பிரமணியம் தயாரித்த “கச்ச தேவயானி” என்ற கன்னடபடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் கே.சுப்பிரமணியத்தை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர். அங்கே நடித்து வந்த புதுமுக நடிகையான சரோஜா தேவியை கண்டு, “யார் அந்த பெண்?” என்று இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார்.
அவர் பெயர் சரோஜா தேவி, பெங்களூரைச் சேர்ந்தவர் என்ற பதில் அப்போது வந்துள்ளது. அது முடிந்து எம்.ஜி.ஆர். அமைதியாக அங்கிருந்து சென்றாலும், அவரது மனதில் ஒரு திட்டம் பிறந்தது. அவர் நடிக்கஇருந்த ‘திருடாதே’ படத்திற்கு சரோஜா தேவியை கதாநாயகியாக தேர்வு செய்ய விரும்பினார். இதனால் சரோஜா தேவியை அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. பிறகு படக் குழுவினர் புதுமுகத்தை நாயகியாக கொண்டுவர குழப்பம் காட்டினாலும், எம்.ஜி.ஆர். தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் ‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் எம்.ஜி.ஆர். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் சரோஜாதேவியை 2-வது கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு இணையாக சரோஜாதேவியின் நடிப்பும் இருந்ததால் பலராலும் அவர் பாராட்டப்பட்டார்.