அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ல் வெளியான தெலுங்குப் படம் ‘ஒடேலா ரயில் நிலையம்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிப்பில் உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஹெபா படேல், வசிஷ்டா என் சிம்ஹா, நாக மகேஷ், வம்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘கந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படம் ஏப்ரல் 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஒடேலா கிராமத்தில் உள்ள மக்களை, குறிப்பாக பெண்களை ஒரு தீய ஆவி துன்புறுத்துகிறது. இதைத் தடுக்கும் வல்லமை படைத்தவராக தமன்னா வருகிறார். முதல் பாகத்தை க்ரைம் த்ரில்லராக உருவாக்கிய அசோக் தேஜா இப்படத்தை முழுக்க முழுக்க பக்தி மற்றும் திகில் படமாக இயக்கியிருக்கிறார். டிரெய்லரில் உள்ள பல காட்சிகள் அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’ படத்தை நினைவுபடுத்துகிறது.

தமிழ் டிரெய்லரில் தமிழைக் கொன்று கொடூரமான முறையில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. “நான் விஷக் காற்றாக மாறி ஒடேலாவை தாக்குவேன்” “கிராமத்தை தாக்கும் முன், நான் அந்த விஷத்தை சாப்பிடுவேன்”. “வாழ்வதற்கு மாடு வேண்டும், வாழ மாடு வேண்டும்”, “பசுவைக் கொன்று வாழத் தேவையில்லை, அதன் கோமியம் கூட குடிக்கலாம்” இவைதான் ட்ரெய்லர் முழுவதும் பேசப்படும் டயலாக்குகள். தமிழ் உரையாடல்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். படத்தின் டயலாக்குகள் இப்படி இருக்குமா என்பது ரிலீஸ் அன்றுதான் தெரியும்.