சென்னை: இசை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை அரங்கேற்றம் லண்டனில் நேற்றிரவு நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் இசை பயணத்தை தொடங்கி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.
இதுதவிர தான் இசையமைத்த பல்வேறு திரைப்படங்களுக்காக இளையாராஜா எண்ணற்ற விருதுகளை வாரிக்குவித்துள்ளார். இளையராஜா இசைக்கு இன்றும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் இசையை கேட்டு மயங்காதவர்களே இல்லை எனலாம்.
அந்த வகையில், இசை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை அரங்கேற்றம் லண்டனில் நேற்றிரவு நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய சிம்பொனி அரங்கேற்றத்தை அனுபவிக்க உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர்.வெறும் 35 நாட்களில் சிம்பொனியை எழுதிய இளையராஜா, அதனை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற எவென்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்ற சிம்பொனி அரங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மெய்மறந்து இசையில் மூழ்கினர்.
முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு காரணமாக அரங்கமே அதிர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்பொனி மட்டும் 45 நிமிடங்களுக்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.