திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அவரை சந்திப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டு மின்றி பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் தமிழகத்திற்கு சரிசமமாக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அவர்கள் ஒவ்வொரு விஜய் படமும் வெளியாகும்போதும் வெளிக்காட்டுவதை பார்க்க முடியும்.
சமீபத்தில் வெளியான “தி கோட்” படத்தின் முதல் காட்சி கேரள மாநிலத்தில் அதிகாலையில் வெளியானது. படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அவரை சந்திப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியை சேர்ந்தவர் உன்னி கண்ணன். 33 வயதான இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.
நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது. இதற்காக அவர் தற்போது சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன் தனது நடை பயணத்தை புத்தாண்டு தினத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கினார்.
கழுத்திலும், கையிலும் நடிகர் விஜய் படம் அடங்கிய சுவரொட்டியுடன் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன், நடிகர் விஜய்யை பல முறை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இதுவரை அவரை சந்திக்க முடியாமல் போனது.
இதனால் நடிகர் விஜய்யை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வருகிறது. தனது ஆசையை நிறைவேற்ற நடை பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.